அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருந்தபோது செல்போன் சினுங்கியது... மகா காலிங்..
வணக்கம், சொல்லுங்க...
உடனே கிளம்பி திருவான்மியூர் வா...
ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு, ஈவ்னிங் வந்து பாக்குறேன்...
ஒரு நாள் லீவ் போட்டா ஒன்னும் ஆகிடாது, வயிற்று வலின்னு போன் போட்டு காரணம் சொல்லிடு....
மேலே உள்ள உரையாடலை படிச்சுட்டு மகா ன்னா மகாலெட்சுமி அந்த மாதிரி யோசிச்சா, தயவு செய்து அந்த நினைப்பை மாத்திக்கொள்ளவும்.
மகாராசன் பொறியியல் படித்த பட்டதாரி, தற்போது வளர்ந்து வரும் தொழிலதிபர்...(அவருடன் இருக்கும் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை தவிர்த்து எல்லாரும் ’சார்’ ன்னு தான் கூப்பிடுவாங்க,நான் ”அண்ணா” ன்னு தான் கூப்பிடுவேன்..) நான்கு வருடத்திற்கு முன்பு நிழல் குறும்பட பயிற்சி பட்டறையில் உருவான நட்பு, இன்னும் தொடர்கிறது. தொடரும்...
பரபரப்பாய் இயங்கிக்கொண்டு இருந்தாலும் மகா மனதில் இலக்கியத்தின் ஆர்வமும், சினிமாவின் வேட்கையும் இருந்து கொண்டே இருக்கும். எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து புத்தகத்தையும் படித்து இருக்கிறார். குறும்படம் எடுக்கனும் என்பது நீண்ட நாள் ஆசை, பல வேலைகளுக்கு நடுவே இந்த வேலை தடை பட்டுக்கொண்டே இருந்தது
அந்த தடைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து, குறும்பட துவக்கத்திற்கு தொடக்க எழுத்தை ஆரம்பிக்க தான் பார்க்க வரச்சொல்லியிருந்தார்.
பார்மல் டிரெஸ்ஸில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறி கிளம்பி, ஆர்டிஒ பீச் பஸ் ஸ்டாப் காத்து இருந்தேன்.. ஒரு கார் எனதருகே வந்து என்னை அள்ளிப்போட்டுக்கொண்டு போனது.. யாரும் கடத்தல, காருக்குள் அண்ணன் மகாராசன்...
இவருக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு, ஆனா இன்னும் காலேஜ் போற பையன் மாதிரியே இருக்குறாரே என மனதில் தோன்றிய கேள்வியை கேட்காமல் பயணித்தோம் புதுச்சேரிக்கு...
(ஆஹா, டிஸ்கசனுக்கு புதுச்சேரி ஒரே ***** தானா ? என கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது. அவர் நிறுத்திட்டார், நான் இன்னும் தொடங்குனதே இல்லை. புரியாதவங்களுக்கு நான் பொறுப்பு இல்லை...)
குளிரூட்டப்பட்ட கார் என்பதால் இடையிடையே கார் நின்று இளைப்பாறியது, நாங்களும் இளைப்பாறினோம்...
மதிய உணவுக்கு புதுச்சேரி போயாச்சு, அவர் உடல்நிலைக்கு தகுந்தார் போல் வீட்டிலிருந்து உணவு டிபன் பாக்ஸில் அடைத்து கொண்டு வந்து இருந்தார். எனக்காக பிரியாணி வாங்கிகொள்ள சொன்னார், கடை இருந்தால் கார் நிறுத்த இடமில்லை. கார் நிறுத்த இடமிருந்தால் அங்கே கடை இல்லை...
ஒரு வழியாக ஒரு கடை கிடைத்தது, உள்ளே போனால் பார்சல் மட்டும் தான் சார், உட்கார்ந்து சாப்பிட கூடாது என்றார் காசு வாங்கி போடுகிறவர். நான் பார்சல் வாங்க தான் போனேன். சரி, பார்சல் பண்ண சொல்லி ஆர்டர் பண்ணிட்டு கேள்விக்கணைகளை தொடுத்தேன் .இவ்ளோ சேர் போட்டு இருக்கிங்க ஏன் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்று.
குடும்பத்தோடு வந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி. தனியாக இளைஞர்கள் வந்தாலும் அனுமதி இல்லை. அதே ஒரு இளைஞருடன் ஒரு பெண் வந்தால் அனுமதி. என்ன சட்டம்டா இது என்றால்..... இங்கே குடித்துவிட்டு வரக்கூடாது அதற்கு தான் இவ்வளவும்... என பதிலளித்தார்...
குடும்பத்துடன் வருவோர் குடித்துவந்தால், பெண்ணுடன் வருபவர் குடித்துவிட்டு வந்தால் என இடைமறித்து கேள்வி கேட்டேன். அப்படி இது வரை இக்கட்டான சூழ்நிலை எங்களுக்கு வரல... வந்தால் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
ஏங்க, ஹோட்டலில் எப்படி இருந்தாலும் சாப்பிட வாங்கன்னு இருப்போர் மத்தியில் இப்படி சட்ட திட்டம் வகுத்தா எப்படிங்க கூட்டம் வரும்னு கேட்டேன்.
ஆரம்பத்தில் யாருமே வரலை, பிறகு குடும்பத்துடன் வர ஆரம்பிச்சுட்டாங்க என்றார். பேசிக்கொண்டு இருந்தபோதே என்னுடைய பிரியாணி பார்சல் வந்து சேர்ந்தது. ஒருவர் குடும்பத்துடன் சாப்பிட உள்ளே வந்து கொண்டு இருந்தார்..
புன்னகையுடன் வெளியேறினேன்...
காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம்.
ஷுவை கழட்டி விட்டு ஒரு இடத்துக்கு கிளம்பினோம். செல்போன் சினுங்காமல் இருக்க அணைத்து வைக்கப்பட்டது, உள்ளே நுழைந்ததும் அவ்வளவு அமைதி. சமாதி போல இருந்த இடத்தில் பல வெள்ளை வெளேர் முகங்கள் (ஃபாரினர்ஸ்) கண்களை மூடி அந்த சமாதியில் முகத்தை பொதித்து எதோ செய்து கொண்டு இருந்தார்கள். எங்கடா என் கூட வந்தவரை காணோமே என தேடி சுற்றும் முற்றும் பார்த்தால் அவரும் அதையே செய்து கொண்டு இருந்தார். இதில் எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை எனக்கு, இருப்பினும் என்னதான் இருக்கு என்று அங்கே வேடிக்கை பார்த்தேன்.. அழகான பூக்களும் அதன் நறுமணமும் என்னை எங்கேயோ கொண்டு போனது...
அண்ணன் இதெல்லாம் நம்புறாரா எனக்கே சந்தேகம் எனெனில் அவரை விட நாத்திகம் என்னால் பேச முடியாது. அய்யா பெரியாரின் மேல் அவருக்கு மரியாதை அதிகம்..
அங்கே, சில புத்தகம் வாங்கினார். எனக்கு ”உள் ஜீவனில் வாழ்தல் மன, பிராண ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் யோக வழி” ன்னு ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்தார். சில படங்கள் வாங்கி கொண்டோம்.. வெளியேறினோம்..
இடம் : சப்தா... அரவிந்தர் ஆசிரமம்... புதுச்சேரி...
திரும்பினோம் சென்னைக்கு, பயணத்தின் இடையே பேசி முடித்தோம். அட, ஆமாங்க கதை விவாதம் முடிந்தது..
ஒவ்வொரு பயணத்தின் போதும் வாழ்க்கையில ஒரு விசயம் கற்றுகொள்ள முடிகிறது என்பது உண்மை தான் . இந்த பயணத்தில் கற்றது :- என்னை பற்றிய ஒரு விமர்சனத்தை இவ்வளவு நாளாக சொல்லாமல் வைத்து இருந்திருக்கிறார் . இந்த பயணத்தின்போது வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். (மகிழ்ச்சி) புரிய வைத்தேன், புரிந்து கொண்டார்..
நாம் சொல்லுகிற அர்த்தம் ஒரு மாதிரி இருக்கும், அதை கேட்போர் ஒரு அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள். இது போன்ற சூழ்நிலையில் வெளிப்படையாக பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்....
பயணம் தொடரும்...

No comments:
Post a Comment