Wednesday, 31 August 2011

மகாவுடன் பயணம்


அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருந்தபோது செல்போன் சினுங்கியது... மகா காலிங்..
வணக்கம், சொல்லுங்க...
உடனே கிளம்பி திருவான்மியூர் வா...
ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு, ஈவ்னிங் வந்து பாக்குறேன்...
ஒரு நாள் லீவ் போட்டா ஒன்னும் ஆகிடாது, வயிற்று வலின்னு போன் போட்டு காரணம் சொல்லிடு....

மேலே உள்ள உரையாடலை படிச்சுட்டு மகா ன்னா மகாலெட்சுமி அந்த மாதிரி யோசிச்சா, தயவு செய்து அந்த நினைப்பை மாத்திக்கொள்ளவும்.

மகாராசன் பொறியியல் படித்த பட்டதாரி, தற்போது வளர்ந்து வரும் தொழிலதிபர்...(அவருடன் இருக்கும் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை தவிர்த்து எல்லாரும் சார் ன்னு தான் கூப்பிடுவாங்க,நான் அண்ணா ன்னு தான் கூப்பிடுவேன்..) நான்கு வருடத்திற்கு முன்பு நிழல் குறும்பட பயிற்சி பட்டறையில் உருவான நட்பு, இன்னும் தொடர்கிறது. தொடரும்...

பரபரப்பாய் இயங்கிக்கொண்டு இருந்தாலும் மகா மனதில் இலக்கியத்தின் ஆர்வமும், சினிமாவின் வேட்கையும் இருந்து கொண்டே இருக்கும். எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து புத்தகத்தையும் படித்து இருக்கிறார். குறும்படம் எடுக்கனும் என்பது நீண்ட நாள் ஆசை, பல வேலைகளுக்கு நடுவே இந்த வேலை தடை பட்டுக்கொண்டே இருந்தது
மகாராசன்

அந்த தடைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து, குறும்பட துவக்கத்திற்கு தொடக்க எழுத்தை ஆரம்பிக்க தான் பார்க்க வரச்சொல்லியிருந்தார்.

பார்மல் டிரெஸ்ஸில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறி கிளம்பி, ஆர்டிஒ பீச் பஸ் ஸ்டாப் காத்து இருந்தேன்.. ஒரு கார் எனதருகே வந்து என்னை அள்ளிப்போட்டுக்கொண்டு போனது.. யாரும் கடத்தல, காருக்குள் அண்ணன் மகாராசன்...

இவருக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு, ஆனா இன்னும் காலேஜ் போற பையன் மாதிரியே இருக்குறாரே என மனதில் தோன்றிய கேள்வியை கேட்காமல் பயணித்தோம் புதுச்சேரிக்கு...

(ஆஹா, டிஸ்கசனுக்கு புதுச்சேரி ஒரே ***** தானா ? என கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது. அவர் நிறுத்திட்டார், நான் இன்னும் தொடங்குனதே இல்லை. புரியாதவங்களுக்கு நான் பொறுப்பு இல்லை...)

குளிரூட்டப்பட்ட கார் என்பதால் இடையிடையே கார் நின்று இளைப்பாறியது, நாங்களும் இளைப்பாறினோம்...

மதிய உணவுக்கு புதுச்சேரி போயாச்சு, அவர் உடல்நிலைக்கு தகுந்தார் போல் வீட்டிலிருந்து உணவு டிபன் பாக்ஸில் அடைத்து கொண்டு வந்து இருந்தார். எனக்காக பிரியாணி வாங்கிகொள்ள சொன்னார், கடை இருந்தால் கார் நிறுத்த இடமில்லை. கார் நிறுத்த இடமிருந்தால் அங்கே கடை இல்லை...

ஒரு வழியாக ஒரு கடை கிடைத்தது, உள்ளே போனால் பார்சல் மட்டும் தான் சார், உட்கார்ந்து சாப்பிட கூடாது என்றார் காசு வாங்கி போடுகிறவர். நான் பார்சல் வாங்க தான் போனேன். சரி, பார்சல் பண்ண சொல்லி ஆர்டர் பண்ணிட்டு கேள்விக்கணைகளை தொடுத்தேன் .இவ்ளோ சேர் போட்டு இருக்கிங்க ஏன் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்று.

குடும்பத்தோடு வந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி. தனியாக இளைஞர்கள் வந்தாலும் அனுமதி இல்லை. அதே ஒரு இளைஞருடன் ஒரு பெண் வந்தால் அனுமதி. என்ன சட்டம்டா இது என்றால்..... இங்கே குடித்துவிட்டு வரக்கூடாது அதற்கு தான் இவ்வளவும்... என பதிலளித்தார்...

குடும்பத்துடன் வருவோர் குடித்துவந்தால், பெண்ணுடன் வருபவர் குடித்துவிட்டு வந்தால் என இடைமறித்து கேள்வி கேட்டேன். அப்படி இது வரை இக்கட்டான சூழ்நிலை எங்களுக்கு வரல... வந்தால் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

ஏங்க, ஹோட்டலில் எப்படி இருந்தாலும் சாப்பிட வாங்கன்னு இருப்போர் மத்தியில் இப்படி சட்ட திட்டம் வகுத்தா எப்படிங்க கூட்டம் வரும்னு கேட்டேன்.

ஆரம்பத்தில் யாருமே வரலை, பிறகு குடும்பத்துடன் வர ஆரம்பிச்சுட்டாங்க என்றார். பேசிக்கொண்டு இருந்தபோதே என்னுடைய பிரியாணி பார்சல் வந்து சேர்ந்தது. ஒருவர் குடும்பத்துடன் சாப்பிட உள்ளே வந்து கொண்டு இருந்தார்..
புன்னகையுடன் வெளியேறினேன்...

காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம்.

ஷுவை கழட்டி விட்டு ஒரு இடத்துக்கு கிளம்பினோம். செல்போன் சினுங்காமல் இருக்க அணைத்து வைக்கப்பட்டது, உள்ளே நுழைந்ததும் அவ்வளவு அமைதி. சமாதி போல இருந்த இடத்தில் பல வெள்ளை வெளேர் முகங்கள் (ஃபாரினர்ஸ்) கண்களை மூடி அந்த சமாதியில் முகத்தை பொதித்து எதோ செய்து கொண்டு இருந்தார்கள். எங்கடா என் கூட வந்தவரை காணோமே என தேடி சுற்றும் முற்றும் பார்த்தால் அவரும் அதையே செய்து கொண்டு இருந்தார். இதில் எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை எனக்கு, இருப்பினும் என்னதான் இருக்கு என்று அங்கே வேடிக்கை பார்த்தேன்.. அழகான பூக்களும் அதன் நறுமணமும் என்னை எங்கேயோ கொண்டு போனது...

அண்ணன் இதெல்லாம் நம்புறாரா எனக்கே சந்தேகம் எனெனில் அவரை விட நாத்திகம் என்னால் பேச முடியாது. அய்யா பெரியாரின் மேல் அவருக்கு மரியாதை அதிகம்..


அங்கே, சில புத்தகம் வாங்கினார். எனக்கு உள் ஜீவனில் வாழ்தல் மன, பிராண ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் யோக வழி ன்னு ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்தார். சில படங்கள் வாங்கி கொண்டோம்.. வெளியேறினோம்..

இடம் : சப்தா... அரவிந்தர் ஆசிரமம்... புதுச்சேரி...

திரும்பினோம் சென்னைக்கு, பயணத்தின் இடையே பேசி முடித்தோம். அட, ஆமாங்க கதை விவாதம் முடிந்தது..



ஒவ்வொரு பயணத்தின் போதும் வாழ்க்கையில ஒரு விசயம் கற்றுகொள்ள முடிகிறது என்பது உண்மை தான் . இந்த பயணத்தில் கற்றது :- என்னை பற்றிய ஒரு விமர்சனத்தை இவ்வளவு நாளாக சொல்லாமல் வைத்து இருந்திருக்கிறார் . இந்த பயணத்தின்போது வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். (மகிழ்ச்சி) புரிய வைத்தேன், புரிந்து கொண்டார்..


நாம் சொல்லுகிற அர்த்தம் ஒரு மாதிரி இருக்கும், அதை கேட்போர் ஒரு அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள். இது போன்ற சூழ்நிலையில் வெளிப்படையாக பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்....

பயணம் தொடரும்...
    

Tuesday, 30 August 2011

வீரவணக்கம்

விடுதலை இசை பறையுடன் செங்கொடி


மூவர் தூக்குதண்டனையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தன்னை ”தீ” க்கு இரையாக்கிகொண்ட தோழர். செங்கொடிக்கு வீரவணக்கங்கள்...  

காப்போம்



ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • தமிழக அரசு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம்...
  • உயர்நீதிமன்றம் - 8 வாரங்கள் தள்ளி வைப்பு...  
  • ஆனால், இன்னும் உறுதியாகவில்லை தூக்கிலிட மாட்டார்கள் என்று... 
  • நம்புகிறேன் நீதி கிடைக்கும்...

Wednesday, 24 August 2011

யுவன் ஆல்பம்

உலகமெல்லாம் உனது அல்லவா
உன் இதயம் மட்டும் எனது அல்லவா.........!
 I WILL BE THERE FOR YOU...

யுவன் சங்கர் ராஜா பாடிய இந்த ஆல்பத்தின் வரிகளை பார்க்க...

http://karuthakili.blogspot.com/search/label/பாடல்

Tuesday, 23 August 2011

உண்ணாவிரதம்

அண்ணாஹசாரேக்கு ஆதரவாக தமிழ் திரை உலகினர் உண்ணாவிரதம் இருந்தனர்..

படங்களை பார்க்க...

செழியனும் விகடனும்

ஆனந்த விகடன் பற்றி ஒளிப்பதிவாளர்  செழியனின் வரிகள் படிக்க....

Monday, 22 August 2011

ஸ்பாஸ்டிக்




மனித உடலாலும் மணத்தாலும் பாதிக்கப்படுவதை ஸ்பாஸ்டிக் என மருத்துவ முறையில் வரையறுக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே,  அவர்கள் தினம் தினம் வாழ்க்கையை கழித்து உயிருடன் வாழ்வதே ஒரு சவாலான விசயமாகும்.

இப்படிப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டதும் அவர்களை பெற்றெடுத்தோர்களே அவர்களை வளர்க்காமல் கைவிட்டு விடுகிறார்கள் . இந்த சூழ்நிலையில் ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டவர்களை தொண்டு நிறுவனங்கள் கருணையின் அடிப்படையில் அவர்களை வாழவைத்து கொண்டு இருக்கின்றன.

இப்பிரச்சனையை எடுத்து சொல்கிறது ஸ்பாஸ்டிக் எனும் விளக்க ஆவணப்படம். ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய், அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும் போன்ற தகவல்களை எடுத்து சொல்கிறது இந்த ஆவணப்படம்.

மனதை வருடும் மெல்லிசையுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் முடியும் போது மனதை வதைக்காமல் விடாது.
இது ஒரு நோயா ? இதில் இவ்வளவு வகை இருக்கிறதா போன்ற உண்மைகளை விளக்குகிற இந்த ஸ்பாஸ்டிக் ஆவணப்படம் சாப்ட்வியூ ஊடகக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்டது.    


கற்பகத்தரு



தமிழ் அறிஞர்களும், முன்னோர்களும் பனைமரத்தை கற்பகத்தரு
என்று அழைத்தனர் . தமிழர்களின் அடையாளமாகவும், உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும்   காணப்படுகின்ற பனைமரத்தை பற்றியும், அதன் ஆரம்பகாலத்திலிருந்து எப்படி வளர்ந்து வருகிறது. எந்த மாதிரியான இடத்தில் வளரும், அதன் இயல்பு என்ன என்பதையும், பனைமரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்றவற்றை தகுந்த ஆதார வீடியோ காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் கற்பகத்தரு(பயன் தரும் பனைமரம்)

கிராமப்புற வயல்வெளிகளிலும், நகர்ப்புற சாலை ஓரங்களிலும் தினமும் பார்க்கப்படுகின்றது பனைமரம் . அந்த பனைமரம் பல மருத்துவ குணங்களை கொண்டு  இருக்கின்றது என்பதையும், பனைமரத்தில் வீணாகக்கூடிய பொருள்கள் எதுவும் இல்லை. பல வகையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது போன்ற பல தகவல்களை இந்த ஆவணப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பல கிராமங்களில் ஒற்றை பனைமரம் சகுணத்தடையாக பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் காஞ்சிபுர மாவட்டத்தில் ஒரு கோவிலிள் உள்ள பனைமரத்திலிருந்து விழும் பனம்பழம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகிறது என்றெல்லாம் இரு விதமாக நம்பப்படுகிறது.

இது போன்ற இன்னும் சுவாரசியமான தகவல்களையும் ,பயன் தரும் விசயங்களையும் தருகிறது கற்பகத்தரு .
சாப்ட்வியூ ஊடகக்கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்டது.       

Monday, 8 August 2011

பயணம்

செம டயர்டுபா, எஸ்டர்டே நைட் தான் ஊர்ல இருந்து வந்தேன், ஒரே பேக் பெயின் என்றெல்லாம் தமிழ் பாதி ஆங்கிலம் பாதி கலந்து பேசி தங்களது பயண களைப்பை பகிர்ந்து கொள்ளும் தோழமைகளை தினமும் பார்க்கிறேன்...

எனக்கு ஒரு விசயம் தான் புரிய மாட்டேங்கிது. பயணம் களைப்பை தருமா ?
எனக்கு இன்று வரை அப்படி இருந்தது இல்லை . ஏனெனில் எனக்கு புடிச்ச சிலவற்றில் பயணம் செய்வது என்பது ரொம்ம்ம்ம்ம்பபபபப புடிச்ச ஒன்று..

குடும்ப திருவிழாவுக்காக, வேலை விசயமா, காரணமே இல்லாம, ஊர் சுற்றல் புராணம், இப்படி எல்லாம் எனது பயணத்தை வரையறுக்கலாம் … ஆனால் எப்படியோ பயணிப்பது என்பது பிடித்த செயல்...

பயணம் எதை நோக்கி
    
     இன்று வரை எனக்கு தெரிந்த கேள்வி இது...
     இன்று வரை பதில் தெரியவில்லை..
பதிலை நோக்கி தான் பயணமும்...............
மேலும்
     சில மனிதர்களை பற்றி படிக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அனுபவங்கள் பயணங்களில் கிடைத்தது என்கிறார்கள்.

நானும் பயணிக்கிறேன்....

அடுத்தடுத்த பதிவுகளில் என்னுடைய பயணங்களை பற்றி விரிவாக எழுதுகிறேன்.......  

குத்துவிளக்கு

சில விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றும் வைபவம் என்று இதற்காக கொஞ்ச நேரம் வீணடிக்கப்படும். எனக்கு இதை பார்த்தாலே எரிச்சலா வரும்...

குத்து விளக்கை இந்த விழாவுக்கு என்று தனியாக வாடகைக்கு வாங்கி அதுல எண்ணை ஊற்றி அதை பத்த வச்சு கொஞ்ச நேரத்தில அதை அணைத்து வைத்து விடுவார்கள்...

சில விழாக்களில் அதிகப்படியான விருந்தினர்கள் வந்து இருப்பார்கள் ஒரு குத்து விளக்கில் அதிகப்படியாக ஆறு திரிகள் வரை ஏற்றலாம், அதிகப்படியான விருந்தினர்கள் வந்து இருப்பின் ஒரு சிலரை கூப்பிட்டு ஒரு சிலரை கூப்பிடா விட்டால் நல்லா இருக்காது என்பதற்காக அனைவரையும் மேடை ஏற்றி ஏற்கனவே எரிகிற குத்து விளக்கை ஏற்ற சொல்லி கையில் மெழுகுவர்த்தியை கொடுப்பார்கள்.

நம்மையும் மதிச்சு கூப்பிட்டாங்களே என்று அந்த சிறப்பு விருந்தினரும் எரிகிற குத்துவிளக்கை புதிதாக ஏற்றுவது போல் பாவலா செய்து விட்டு வருவார்...

ஒரு சில சிறப்பு விருந்தினருடன் அவருடைய அல்லக்கைகள் வரும் அதுக என்ன பண்ணுங்க தெரியுமா ? ( மரியாதை எங்கேனு கேக்க கூடாது )...........

நம்மாலு குத்துவிளக்கு ஏத்த போறார், ஆனால் குத்துவிளக்கின் அனைத்து திரியுமே எரியுதேன்னு, இது போய் எரிகிற குத்து விளக்கின் ஒரு திரியை கையாலேயே அனைச்சுடும். அப்புறம் அந்த சிறப்பாளர் குத்துவிளக்கு ஏற்றுவார். ( எம்புட்டு மொதலாளி விசுவாசம் பாருங்க )..   

இதை ஒரு தலைப்பா எடுத்துகிட்டு அலச காரணம் இருக்கு...

இந்த பிரச்சனை எதுவும் இல்லாமல் ஒரு குத்துவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது...


ஒரு ஓவிய கண்காட்சியை துவக்க ஜனாதிபதி பிரதீபா(பாட்டி)பாட்டீல் குத்துவிளக்கு படத்தில் திரி பற்ற வைத்து எரிய வேண்டிய இடத்தில் வரைந்து இருக்கார்....  
( நல்ல கற்பனை ஆற்றல், வாழ்த்து சொல்லனும்ல.....)
மேலே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.......
தின நாளிதலை பார்த்ததும் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது...


இதை எல்லாரும் பின்பற்றுங்கப்பான்னு நான் சொன்னா கேட்டுரவா போறாங்க...

Saturday, 6 August 2011

கவிதை

அறிவுமதியின் ”நட்புக்காலம்” கவிதை தொகுப்பை படிக்க

இங்கே க்ளிக் செய்யவும்...

நட்புக்காக

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .

இந்த வருடத்தில் (07*08*2011-ஞாயிறு) நண்பர்கள் தினம்.

எனக்கு இதுல உடன்பாடே இல்ல, ஏனெனில் வருடத்தின் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அதை (நண்பர்கள் தினம்) ஒரு சிறப்பான நாளாக கொண்டாட அவசியம் இல்லை..

நமக்கெல்லாம் தினம்தினம்(நண்பர்கள் தினம்)சிறப்பான நாள் தான்...
இருப்பினும்...

ஊரோடு ஒத்து வாழனும் என்ற பழமொழியை மதிப்பதாக சொல்லி இந்த நண்பர்கள் தினத்தை கொண்டாடியே ஆகனும்...

எனக்கு சில நண்பர்களே ஆனால் அவர்களை பற்றி சொல்வது என்றால் நிறையா சொல்லனும்...

(மற்றொரு பதிவில் கண்டிப்பாக எழுதுவேன்)

என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்களை அனைத்து நண்பர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்

பெற்றோர் உற்றோர் அனைவரும் இருந்தும் எந்தவித ரத்த சம்மந்தம் இல்லாமல் எனக்கு ஒன்னுனா துடிக்கிற என் உயிர் தோழமைகளுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....


Friday, 5 August 2011

சமச்சீர் கல்வி


தமிழகஅரசு : சைக்கிள் வேணுமா...?

பள்ளி மாணவ  
மாணவிகள்  : வேணாம்...

தமிழகஅரசு : ஓ, லேப் டாப் வேணுமா..?

பள்ளி மாணவ  
மாணவிகள்  : வேணாம்...

தமிழகஅரசு :  ஓ ஹோ, இலவச பஸ் பாஸ் வேணூமா..?

பள்ளி மாணவ  
மாணவிகள்  : வேணாம்...

தமிழகஅரசு  : அப்புறம் என்ன தான் வேணும்...


பள்ளி மாணவ  
மாணவிகள்  : படிக்க புக் குடுங்க முதல்ல...


இது தான் தமிழகத்து பள்ளிகளின் நிலைமை, சமச்சீர் கல்வி பிரச்சனையில் இன்னும் சில பள்ளிகளுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை......

சமச்சீர் கல்வி திட்டம் கண்டிப்பாக வந்துவிடும் என்று சில பள்ளிகள் பழைய புத்தகங்களை வைத்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் மாணவ, மாணவிகள் தயக்கத்துடனேயே படிக்கிறார்களாம்.......

பாதி படிச்சு புத்தகம் மாறிடுச்சுனா....? இது தான் அவங்க பயம். ஆனால் இனிமேல் புதிய பாடத்திட்டம் கொண்டு வர வாய்ப்பே இல்லை. அப்படி தயாரிக்கனும் என்றாலும் அதற்கு எந்த ஆசிரியர்களும் தயாராக இல்லை...

முன்னாடி எல்லாம் வருடத்தின் கடைசியில் கல்வி சுற்றுலா நடக்கும். இப்ப வருடத்தின் துவக்கத்திலேயே களப்பயிற்சி எனும் பெயரில் தினம் தினம் சுற்றுலா தான்..

பிள்ளைகளை வங்கிகள், தொழிற்சாலைகள், அஞ்சலகங்கள், தாலுகா அலுவலகங்கள், அணைக்கட்டு, கோவில், குளம்னு கூட்டிக்கிட்டு திரியுறாங்க......

என்ன கொடுமைடா இது என்று சொல்ல தோன்றுகிறது........

Related Posts Plugin for WordPress, Blogger...