Friday, 25 June 2010

மார்க்சிய மெய்யியல்

1. மார்க்சிய மெய்யியல்
வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்
பொருள்:
பொருள் என்றால் என்ன?
பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.
பொருளை எப்படி அறிவது?
ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான். கண்ணால், காதால், நாசியால், வாயினால் மற்றும் உடலால் உணரப்படுவது அனைத்தும் பொருள்கள்.
காற்று என்பதும் ஒரு பொருள்தான்.
கருத்து:
ஐம்புலன்களால் அறிய முடியாதவை என்று ஏதேனும் உண்டா?
ஆம். ஐம்புலன்களால் அறிய முடியாதவைகள் உண்டு. அவை அனைத்தும் கருத்து எனப்படும். நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.
பொருள் முதல் வாதம்:
பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. பொருளை நீங்கள் தூள் தூளாக உடைக்கலாமே தவிர அவற்றை அழிக்க முடியாது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும்.
பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர,
பொருளுக்கு வயது கிடையாது.

கருத்தின் வயது என்ன?
கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை.
குருவி போல் மனிதன் என்றுமே கூடு கட்டமுடியாதுதான், ஆனால் குருவி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே வடிவிலான கூட்டை மட்டுமே கட்டும். ஆனால் மனிதன் முன்கூட்டியே சிந்திக்கும் திறன் பெற்றிருப்பதால்தான் அவனால் நீருக்குள்ளும் வீடு கட்ட முடிகிறது.
கருத்து என்பது மனித மூளையின் தன்மை. கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும்.
வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது. கருத்து உருவாகும் உறுப்பு மூளை.
அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே
ஆனால் பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.
எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு.
அறிவியல் வளராத காலத்தில் நம்மை சுற்றியுள்ள இந்த பருப்பொருள்கள் (பொருளின் வடிவங்கள்) ஆதியும் அந்தமும் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பவில்லை, எனவே இவை அனைத்தையும் ஒருவரின் கையில் கொடுத்து அவர்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றனர்.
அந்த ஒருவர் தான் கடவுள்.
அந்த வகையில் கடவுள் வெறும் கருத்துதான்.
ஏனெனில் கடவுளுக்கு சொல்லப்படும் விளக்கம் என்ன?
அவர் புலன்களால் உணரமுடியாதவ்ர்.
எனவே கடவுள் வெறும் கருத்துதான்.
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டதே ஒழிய மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல.
இயக்கவியல் பொருள் முதல் வாதம்:
பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது?
இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.
இயக்கவியலில் மூன்று முக்கியமான விதிகள் உண்டு
1. எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்.
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்.
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு.
இந்த மூன்று விதிகளும்,
1. இயற்கை
2. மனித சமுகம்
3. மனித சிந்தனை
மூன்றிற்கும் பொருந்தும்.
எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்
அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்
மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் – நனவிலி மனம்
அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்
எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.
இயற்கையில், niiநீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.
மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)

நிலை மறுப்பின் நிலை மறுப்பு.
மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் Uஉள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது.
இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.
மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.
வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்
-தொடரும்


-- நன்றி

விழிவேந்தன்..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...