Tuesday 12 September, 2023

‘குரலரசி’ சொர்ணலதா-வுக்கு நினைவஞ்சலி!

 



பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க அலாரம் ஒலியே வீட்டின் பக்கத்திலிருக்கிற அலங்கார அன்னை தேவாலயத்திலிருந்து வருகிற முதல் பாடல் தான் “நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில்”. இந்த பாடலை கேட்கும் போது கிடைக்கிற மன அமைதி என்பது எப்படி சாத்தியமானது என்பது இன்று வரை என்னிடம் பதில் இல்லை. உள்ளச்சமநிலையற்று இருந்தால் இப்போதும் கேட்கும் பாடல் இது தான்.


ஊரில் வேலையில்லாமல் சுற்றித் திரிந்த அண்ணன் ஒருவரை காதலித்த என் அத்தை மகள் அடிக்கடி முணுமுணுக்கிற பாடல் “நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம்”. இந்த பாடலை பின் நாளில் அவங்க தங்கைக்காக நான் பாடித்திரிஞ்ச காலமும் இருந்தது. இன்றும் மைனாக்குட்டிக்காக அடிக்கடி கேட்கிற, பாடுகிற பாடலும் கூட..

ஆடி மாதம் கூல் ஊற்றுகிற சென்னை மாரியம்மன் கோவில்களில் சவுண்டு ஸ்பீக்கர்களில் ஒலிபரப்பப்படுகிற போது தான் கூர்ந்து கவனித்தேன். என்ன காதல் பாட்டு ஓடுதுன்னு பிறகு தான் இடையே வருகிற வரிகளின் அர்த்தத்தால் அது காதல் பாடலாக உணர்ந்திருக்கிறேன். ஆத்தாவிடம் முறையிடுகிற பெண்ணின் கூக்குரல் அது. “மேற்கு சீமையில கதை ஒன்னு நடக்குதம்மா” பாடலில் இடையே வரும் “காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா, கழுத்தில் மாலை விழ நினைச்சது தப்பா தாயே” என்ற கூக்குரல் ஆத்தாளையே உலுக்கி எடுத்துடும். இன்றும் வைப் மூட்-க்கு மாற்றுகிற பாடல் இது.

காமம் குறித்த விவரம் இளம் வயதிலே தெரிந்தாலும், புரிதல் தெரிய வரவே கல்யாணமாகி வருடங்கள் கடந்த பிறகு தான் உண்மையை உணர்த்துகிறது. அவசர நிலையில் திரவ வெளியேற்றலுக்கும், ஆர்கசத்திற்கான வித்தியாசமும் கூட. அப்படியான ஒரு பாடல் தான் “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்”. சின்ன வயசுல பொதிகை டிவியில பார்க்கக் கூடாதுன்னு பெருசுங்க அமத்திடுங்க; ஆனால் இப்போதெல்லாம் கேட்கும் போது அந்த குரலில் இருக்கிற வாஞ்சை எங்கேயோ இழுத்துச் செல்லும். ஆங்கிரி மோடிலிருந்து கில்மா மோடுக்கு உடனடியாக மாற்றும் பாடல் இது.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. அப்போதெல்லாம் ஆடுறதுக்கான பாடலா மட்டுமே தெரிஞ்சது. பெண்ணின் மன உணர்வை அடக்கி பலி வாங்க காத்திருக்கிற ஒரு பெண்ணோட வலி அது. “ஆட்டமா தேரோட்டமா” கேட்டால் கொஞ்சம் ஆடுவதற்கும், தாளம் போடுவதற்கும், முணுமுணுப்பதற்கும் சூப்பரான பாடல் இது.

இந்த பாடல்கள், வேறு வேறு படங்கள், இசையமைப்பாளர்கள், எழுதியவர்கள் என வித்தியாசப்பட்டாலும் ஒரே ஒற்றுமை இந்த குரல்கள் அனைத்தும் “சொர்ணலதா” என்னும் குரலரசியின் குரல்.

காதுகளின் வழியாக மனதிற்குள் புகுந்து மாயம் செய்கிற வித்தை இந்த குரலுக்கு உண்டு. கோவமா இருந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப, வெறுப்பு மனநிலை வந்தால் காதலை அதிகப்படுத்த, சோம்பலை முறித்து துள்ளாட்ட மனநிலைக்கு மாற்ற, இப்படி என்னென்னவோ செய்கிற குரல் இது.

திடீரென்று நேற்று எப்ப இறந்தாங்க சொர்ணலதா என்று இணையத்தில் பார்த்த போது 2010 செப்டம்பர் 12 அன்று இறந்திருக்காங்க என்று தெரிய வந்தது. குரலால் வசியம் செய்த வசியக்காரிக்கு ‘சொர்ணலதா’-வுக்கு நினைவஞ்சலி!

Saturday 4 January, 2020

அக்கறையான ஆண்கள்

புதிதாய் திருமணம் செய்து கொண்ட தன் தோழி யோகேஸ்வரியிடம் அவள் தோழி நித்யபிரியா பேசுகிறாள்…

நித்யா: நல்லா இருக்கியா? உன் புருசன் பத்திரமா பாத்துக்கிறானா? சந்தோசமா இருக்கீங்களா?

யோகேஸ் : நல்லா இருக்கேன்டி, அப்பப்ப செல்லமா சண்டை போட்டுப்போம். அப்புறம் கூடிப்போம், ரொம்ப சந்தோசமா இருக்கேன். மகிழ்ச்சி!!

நித்யா: வீட்டு வேலையெல்லாம் ஒரே ஆளா பார்க்க கஷ்டமா இல்லையா?

யோகேஸ்: ஹே, அவன் ஹெல்ப் பண்றான்டி…

நித்யா: என்னது ஹெல்ப் பண்றானா? சூப்பர்பா...

யோகேஸ் : ஆமான்டி, சூப்பரா கோலம் போடுவான், பாத்திரம் கழுவி குடுப்பான்,சமையலுக்கு வெங்காயம்,தக்காளி எல்லாம் கட் பண்ணித் தருவான், ரொம்ப ஹெல்ப்பா இருக்கான்டி

நித்யா: எங்க பசங்கெல்லாம் அப்படித்தான் இருப்பாங்க, உங்கள்ள தான் நான் ஒசந்தவன் அப்படி இப்படின்னு மீசையை முறுக்கிகிட்டு திரிவாங்க, இந்தாண்ட கிடக்குறத எடுத்து அந்தாண்ட போட மாட்டானுங்க, வேலைக்கு போகாட்டியும் கூட வீட்ல இருந்துகிட்டு ஓவரா பண்ணுவாங்க, நமக்கு உடம்பு சரியில்லையின்னாக் கூட ஒரு வேலையையும் அவனுங்களே செஞ்சுக்க மாட்டானுங்க.. எங்க பசங்க வேலைக்கும் போய் நல்லா சம்பாதிப்பாங்க வீட்டுக்கு வந்தும் பொண்ணுங்களுக்கு உதவியா இருப்பங்க!!! பாத்தியா எப்டி அக்கறையா இருக்காங்கன்னு????

யோகேஸ்: ஆமான்டி, அதை நானும் நெனைச்சுப் பார்த்தேன். எங்க வீட்லயும் எல்லா வேலையுமே எங்க அத்தை தான் செய்யும் பாவம். ஒரு சின்ன உதவி கூட எங்க மாமா செய்ய மாட்டாரு, இப்பத்தான் அதையெல்லா யோசிச்சுப் பாக்கலையில, நான் லக்கிடீ..

நித்யா: ரொம்ப சந்தோசம்டி..

(இது கற்பனையல்ல முழுக்க முழுக்க உண்மையான உரையாடல், சரி இது எப்படி உங்களுக்கு தெரியும்னு நீங்க கேட்க வருவது புரியுது, நான்கு பேருக்கு நல்ல மெசேஜ் சொல்லனும்னா ஒட்டுக் கேட்குறது தப்பே இல்லை)

Thursday 2 January, 2020

குட்டீஸ்கள்

இந்த குட்டீஸ்களோடு பழகிய ஆறு நாட்களில் நாம இன்னும் பத்து வருடம் பின் தங்கியிருக்கோமோன்னு யோசிக்க வச்சாய்ங்க..

தொழில்நுட்பம், சிந்தனை திறன், பேச்சு, செயல், வரலாறு பற்றிய பார்வை, எதிர்கால திட்டம் என வேற லெவலில் இருக்கிறார்கள்..

ஆரோவில்லில் நடந்த குறும்பட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் நிலா, விர்ஷின், கிருபாகர்..

- சித்து

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்


இல்வாழ்க்கை சிக்கலில் ஆண்களால் பெண்களை சமாளிக்க முடியாத பிரச்சனைகளில்
பெண்களால் ஆண்களை சமாளிக்க முடியாத பிரச்சனைகளில்
சின்ன சின்ன ஈகோ தான் பெரும் நெருக்கடிகளை உண்டாக்குகிறது.

அவற்றை களைவதற்கு என்ன செய்யலாம் என்கிற கைடு என்றே சொல்வேன் இந்த புத்தகத்தை..

இதை ஏன் அப்ளை பண்ணாம விட்டோம்னு நமக்கு தெரிந்ததை மீண்டும் நமக்கே புதிதாய் அறிமுகப்படுத்துகிறது இந்த புத்தகம்.

புதுசா கல்யாணம் பண்ற ஜோடிகளுக்கு புத்தகம் அன்பளிக்க ஆசைப்பட்டால் இதை வாங்கி குடுங்க; உண்மையிலேயே பயனுள்ளதாய் இருக்கும்..

- சித்து

Wednesday 1 January, 2020

புத்தாண்டு

#Happy_New_Year_2020
#May_all_beings_be_happy


தென்னிந்திய பெளத்த விஹாரில் புத்த வந்தனா சுத்தாக்களோடு ஆரம்பமானது புத்தாண்டு இரவு...

சென்னை புத்த தம்ம சங்க தலைவர் பெளத்த ஜீவா அப்பாவோட இறுக்கமான அரவணைப்பிலும் வாழ்த்திலும் புத்தாண்டு பிறந்தது...

மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் போதி தம்ம தேரோ அவர்களுடன் நிலாதம்மா சங்கத்து உறுப்பினர்களோடு பெளத்த வாழ்வியல் கலந்துரையாடல் நடைபெற்றது...

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகதலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணாவிடமிருந்து புத்தாண்டு வாழ்த்தும் இனிப்பும் பாபாசாகேப் டைரியும் கிடைத்தது...

கோரேகான் வெற்றி தினத்தை சென்னை பாபாசாகேப் மணிமண்டத்தில் கொண்டாடுவோம்...

#ஜெய்_பீம் #நமோ_புத்தாய

- சித்து

பஞ்ச சீலம்



நீயா நானாவில் வருட ஜோதிடம் சொல்பவர்கள் ஒருபக்கம் சினிமாக்காரர்கள் ஒருபக்கம் பேசினார்கள்…

கோபிநாத் கேட்கிறார் யாருக்கு ஜோதிடம் தேவைப்படாதென்று?

ஒரு பெண் ஜோதிடர் சொன்னார் “பஞ்சமா தீமைகள்” செய்யாதவருக்கு ஜோதிடம் தேவைப்படாது.

அதாவது பஞ்சமா தீமைகள் என்று அவர்கள் சொல்ல வருவது

உயிர்வதை செய்யக்கூடாது, திருடக்கூடாது, பிழையுறும் காம செயல் செய்யக்கூடாது, பொய் பேசக்கூடாது,போதையை உண்டாக்கக் கூடியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதையேத்தானேடா 2500 வருடத்திற்கே முன்பே சொல்லிச் சென்றார் அரஹந்தர் புத்தர்…

பல பிரச்சனைகளின் ஆரம்பமே இந்த ஐந்திலிருந்து ஆரம்பிக்கிறது என்பதாலேயே புத்தரை பின்பற்றுபவர்கள் பஞ்சசீலம் என்று இவையை செய்ய மாட்டோமென அவர் முன் உறுதியேற்கின்றனர்.

#ஜெய்_பீம்
#நமோ_புத்தாய
Related Posts Plugin for WordPress, Blogger...